×

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா: கவர்னர் பன்வாரிலால் பங்கேற்பு

சென்னை: சென்னை அருகே மேலக்கோட்டையூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக் கழகத்தின் பனிரெண்டாவது பட்டமளிப்பு விழா நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள உள்  விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. தமிழக பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். பல்கலைக் கழக துணைவேந்தர் ஷீலா ஸ்டீபன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்  தமிழ்நாடு உடற் கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக மற்றும் உறுப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த 41 பேருக்கு பி.எச்.டி. பட்டம், 79 மாணவர்களுக்கு எம்.பில். பட்டம் உள்பட 151 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை  வழங்கினார்.
மேலும், இந்த பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் பயின்ற 2017 - 2018 மற்றும் 2018 - 2019 கல்வி ஆண்டுகளில் மொத்தம் 7889 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலைவர் பாஸ்கரன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

கடுப்பான கவர்னர்   
இந்த பட்டமளிப்பு விழாவில், கவர்னர் 11 மணியளவில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 2 மணி நேரத்திற்கு முன்பாக மாணவ, மாணவிகள் கொளுத்தும் வெயிலில் கொடிகளை பிடித்தபடி நிறுத்தப்பட்டிருந்தனர்.  மேலும் கவர்னர் வந்ததும் பல்கலைக் கழக துணைவேந்தர் ஷீலா ஸ்டீபன் ஆண்டறிக்கை வாசித்தார். இது நீண்டு கொண்டே போனதால் வெறுப்படைந்த கவர்னர் சீக்கிரம் முடிக்குமாறு கூறினார். அதேபோன்று பட்டம் பெறும் மாணவர்களை  ஒவ்வொருவராக அறிவிக்காமல் மொத்தமாக அறிவிக்குமாறு கூறப்பட்டு அவ்வாறே செய்யப்பட்டது. மேலும், பட்டங்களை கவர்னர் கையால் வழங்காமல் முன்னதாகவே மாணவர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் அதை கையில் ஏந்தியபடி  வரிசையில் நின்றிருந்தனர். பின்னர் கவர்னர் அருகே அவர்கள் சென்று கவர்னர் சான்றிதழை தொட்டபடி போட்டோவுக்கு போஸ் மட்டும் கொடுத்தார்.

Tags : Banwaril ,Graduation Ceremony , Tamil Nadu ,Physical ,Education , Sport, University, Governor Banwaril
× RELATED சீனாவில் இருந்து வெளியேறும்...